சிதறடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளவும் தமிழ்த் தேசியத்தின் வழியே தேசமாக ஒன்றிணைக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியானது தமிழர் ஒற்றுமையின் வாடிவாசலாகும். செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறப்போகும் மௌனப் புரட்சியில் விடுதலையின் விழுதுகளாக அணியமாவோம் என யாழ் வடமராட்சி ஊடக இல்லம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து யாழ் வடமராட்சி ஊடக இல்லம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் தமிழர் போராட்ட வரலாற்றின் தாங்கு தூண்களாக விளங்கும் மாபெரும் மக்கள் சக்தியானது, நிலத்திலும் புலத்திலும், அமைப்புகளாகவும், குழுக்களாகவும், இயக்கங்களாகவும், கட்சிகளாகவும் சிதறடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழர் ஒற்றுமை சிதைக்கப்பட்டு பிழைப்புவாத அரசியல் மேலாங்கிவருகிறது.
ஆயுதப் போராட்டத்தின் அதியுச்ச நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு ஜனநாயக வழிமுறை போராட்டம் முகிழச் செய்யப்பட்டிருந்தது. தமிழர் விடுதலைப் போராட்டம் வீழ்த்தப்பட்டதற்கும் தமிழர்கள் இன்று பல கூறுகளாக சிதறடிக்கப்பட்டதற்கும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகளின் தமிழர் விரோத செயற்பாடுகளே மூலகாரணமாகும். அதுவே தமிழர் சிதைவுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு எண்ணற்ற சவால்களுக்குள்ளாக, தமிழர்கள் பல கூறுகளாக சிதறடிக்கப்பட்டு, தமிழ்ச் தேசிய நீக்கம் செய்யப்பட்டு சிங்கள பௌத்த பெருந்தேசியவாத்திற்குள் கரைந்துபோகும் பேராபத்து சூழ்ந்துள்ளது. இவ்வாறான நெருக்கடிமிக்கதான காலகட்டத்தில், நடைபெற உள்ள அரசு தலைவருக்கான தேர்தலை தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர்கள் எதிர்கொள்ளும் தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எமது மரபுவழித்தாயக மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே தீர்மானித்துக் கொள்ளும் இலக்கு நோக்கியதான பயணத்தில் நாம் தேசமாக ஒன்றிணைவது மிக மிக அவசர அவசியமாகும். அந்தவகையில் கடந்த 15 ஆண்டுகளில் தமிழர் பெரும்பரப்பில் நிகழ்ந்துவரும் அத்தனை எதிர்மறை விடையங்களையும் சீர்ப்படுத்தி தமிழ்த் தேசிய அரசியலை தமிழர் அபிலாசைகளின் வழியே நெறிப்படுத்தும் வகையில், தமிழர்கள் தேசமாக ஒன்றிணைவதற்கான வாடிவாசலாக தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியை நாம் பார்க்கின்றோம்.
இவ்வாறான பின்னணியில், கட்சி அரசியல் கடந்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாக ஒன்றிணைந்துள்ள சிவில் சமூகங்கள் என்ற வகையில் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தினராகிய நாம் எமது ஆதரவுக் கரத்தை ‘சங்கு’ எனும் அடையாளத்தை நோக்கி காட்டிநிற்கின்றோம்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எந்த நிலையிலும் எவ் வடிவிலேனும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லை. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வாக சமஷ்டியையே தமிழ் மக்களாகிய நாம் கோரி நிற்கின்றோம். இதனையே யாழ் வடமராட்சி ஊடக இல்லமும் எதுவித சமரசத்திற்கும் இடமின்றி வலியுறுத்தி நிற்கின்றது.
இனவழிப்பு செய்யப்பட்ட இனமாக சர்வதேசத்திடம் நீதிகேட்டு எழுந்து நிற்கும் இனமாக அதனை வலுப்படுத்தும் வகையில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு நாமும் எமது ஆதரவை வழங்கி நிற்கின்றோம்.
ஆகவே இவ் வரலாற்று சந்தர்ப்பத்தினை எமதாக்கும் வகையில், செப்டெம்பெர் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் அனைவரும் வாக்குச்சாவடிகளை நோக்கி அலைகடலெனத் திரண்டு ‘சங்கு’ சின்னத்துக்கு நேராக ஒரே ஒரு புள்ளடியை மட்டும் இட்டு மௌனப் புரட்சியின் விழுதுகளாக அணியமாவோம்.