சங்கே முழங்கு | Sange Mulanku

சங்கே முழங்கு

பொது வேட்பாளர் ஏன்?​

ஈழத் தமிழர்கள் மீதான இனவழிப்பின் உச்சமாக முள்ளிவாய்க்காலில் சிங்கள பௌத்த இனவாத சிறீலங்கா அரசினால் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட பல்லாயிரக் கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இக் கொடூரக் கொலைவெறித் தாண்டவத்தால் மனோரீதியாக நடைப் பிணங்களாக்கப்பட்ட எம்மக்கள் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பல்வேறு அடக்கு முறைகளை அரச படைகளாலும், அரச திணைக்களங்களாலும் இன்றளவும் எதிர் கொண்டு வருகின்றனர்.

கேள்விகளும் பதில்களும்

1. தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன்?
தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கு. தமிழ் மக்களுக்கே தங்கள் பலம் எது என்பதை உணர்த்துவதற்கு. தமிழ் மக்கள் ஒரு கொள்கைக்காக வாக்களிக்கும் மக்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதற்கு. தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்பதனை நிரூபிப்பதற்கு. தமிழ்மக்களிற்கு என்ன தேவை என்பதைத் தொடர்ச்சியாகச் சொல்வதற்கு. சிறீலங்கா அரசை அம்பலப்படுத்துவதற்கு.
2. தமிழ் மக்களை ஏன் ஒன்று திரட்ட வேண்டும்?
தமிழ்மக்கள் கட்சிகளாய், கொள்கைகளாய், சாதியாய், சமயமாய், வடக்காய், கிழக்காய், தியாகியாய், துரோகியாய், கட்சிக்குள்ளேயே அணிகளாய், ஆலய அறக்கட்டளைகளுக்குள் அணிகளாய், திருச்சபைகளுக்குள் பிரிவுகளாய், பாடசாலை பழைய மாணவர் சங்கங்களுக்குள் அணிகளாய், உடைந்து சிதறிப்போய்க் காணப்படுகிறார்கள். எனவே, அவர்களைச் சிதறடிக்கும் எல்லா வேறுபாடுகளுக்கும் அப்பால் அவர்களை ஒன்று திரட்ட வேண்டும். ஒருவர் மற்றவரை நம்பும் மக்களாய், ஒருவர் மற்றவருக்கு உதவும் மக்களாய், ஒன்றாகத் திரண்டு உலகத்துக்குத் தங்கள் ஐக்கியத்தைக் காட்டும் மக்களாய்த் தமிழ் மக்களை ஒன்றாக்க வேண்டும்
3. பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையில் என்ன தீர்வு முன்வைக்கப்படும்?
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான உச்சபட்சத் தன்னாட்சி. இன அழிப்புக்கு எதிரான பரிகார நீதி.
4. தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளருக்கு வாக்களிக்கத் தவறினால் என்ன நடக்கும்?
தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். தென்னிலங்கை மைய வேட்பாளர்களிற்குத் தமிழ் வாக்குகள் மூன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளாகச் சிதறும். ஒரு பகுதி வாக்களிக்காமல் விலகி நிற்கும். ஆக மொத்தம் தமிழ் வாக்குகள் நான்கிற்கும் மேற் பட்ட வேட்பாளர்களால் சிதறு தேங்காயாகச் சிதறடிக்கப்படும். இன்னுமொரு வகையில் கூறுவதானால், ஒரு தேசமாகத் திரண்டு எமது அரசியல் அந்தஸ்து, அபிலாசைகள் என்ப வற்றை உரத்துச் சொல்வதற்கான இன்னுமொரு சந்தர்ப்பத் தையும் அதற்கூடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய அரசியற் பேரம் பேசும் பலத்தையும், தற்காலிகமாக இழப்போம்.
5. தமிழ்ப் பொது வேட்பாளர் பெருமளவு வாக்குகளைப் பெறவில்லை என்றால்?

தேசியவாத அரசியல் என்பது மக்களை ஆகப்பெரிய திரட்சியாக மாற்றுவது. பொது வேட்பாளர் அதைத்தான் செய்யப்போகின்றார். எவ்வளவுக்கு எவ்வளவு தமிழ் மக்கள் ஐக்கியப்படுகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ் வாக்குகள் திரளும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஆகக் கூடிய வாக்குகளைப் பெறுவார். ஆகவே இக்கேள்வியே எழாதவாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுதல் காலத்தின் தேவை.

6. தமிழ்ப் பொது வேட்பாளர் தேர்தலில் வெல்வாரா?
இல்லை. யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்தான் வெல்வார்.
7. தோற்பதற்காக ஒருவரைத் தேர்தலில் நிறுத்த வேண்டுமா?
அவர் ஜனாதிபதியாக வரமாட்டார் என்ற ஒரு விடயத்தில் தான் தோற்பார். மற்ற எல்லா விடயங்களிலும் வெல்வார். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில், கட்சி கடந்து, பிரதேசத்தைக் கடந்து சாதி கடந்து, சமயம் கடந்து, பால்நிலை அசமத்துவங்களைக் கடந்து தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதைத் தவிர வேறு வெற்றி மக்களுக்கு வேண்டுமா?
8. ஏன் தமிழ்ப் பொதுவேட்பாளர்?
தென்னிலங்கையில் உள்ள வேட்பாளர்களில் யாரையும் நம்ப முடியாதா? முடியாது. ஏனென்றால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களிற்கும் வாக்களித்ததால் தமிழ் மக்களிற்குத் தீர்வு கிடைத்ததா? வாழ்வின் சகல விடயங்களிலும் ஊடுருவியிருக்கும் இனப் பாரபட்சம் நீங்கியுள்ளதா? நிலப்பறிப்பும் சிங்களபௌத்தமயமாக்கலும் நிறுத்தப்பட்டதா?
9. தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் பொழுது அது தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டி விடாதா?
நீங்கள் கேட்பதைப் பார்த்தால் இனவாதம் இப்பொழுது பதுங்கி விட்டது அல்லது நித்திரை கொள்கிறது என்று கருதுவது போலத் தெரிகிறதே? அப்படியென்றால், மயிலத்தமடுவில், மாதவனையில் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பது யார்? குருந்தூர் மலையில், வெடுக்குநாறி மலையில் கோவில்களை ஆக்கிரமிப்பது யார்? நடைமுறையில், சிங்கள இனம் தவிர்ந்த ஏனைய தேசிய இனங்களையும், மக்கள் குழுமங்களையும் மட்டுமே பாதிக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் புதுப்பிக்க முற்படுவது யார்? நடந்தது இனஅழிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது யார்? பன்னாட்டு விசாரணையை ஏற்றுக்கொள்ள மறுப்பது யார்
10. ஏன் சங்குக்கு மட்டும் புள்ளடி போட்டு வாக்களிக்க வேண்டும்?

பொதுவேட்பாளர் தேர்தலில் நிற்பதே தென்னிலங்கை அரசியல்வாதிகள் எம்மை ஏமாற்றுகிறார்கள், அவர்களை நாங்கள் ஏற்கவில்லை என்பதனால்தான். அந்த வகையில் இரண்டாவது மூன்றாவது தெரிவு என்ற பேச்சுக்கே இடமில்லை.